நரைமுடியும், தளர்ந்த நடையுமாக முதியவர் ஒருவர் பேரப் பிள்ளைகளைப் பார்க்க, அவர் இருந்த நகரத்திலிருந்து பிறந்து வளர்ந்த கிராமத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தார். கிராமத்திற்கு அருகே செல்லச் செல்ல மண் வாசனை வீசியது, எங்கும் பச்சைப் பசேல் என்ற வயல்வெளிகள். அதன் வழியாக சென்றபோது, சற்று ஓய்வெடுக்கலாம் என்று மரத்தடியில் அமர்ந்தார். அப்பொழுது சில சிறுவர்கள், பட்டத்தை தெளிந்த வானத்தில் பறக்கவிட்டு மகிழ்ந்து விளையாடிக் கொண்டிருப்பதைக் கவனித்தார்.
சிறுவர்களின் விளையாட்டும், கலந்துரையாடலும் சிறிது நேரத்திற்குள் வாக்குவாதமாக மாறியது. அதில் ஒருவன், அதோ அங்கே முதியவர் ஒருவர் நம்மை கவனித்துக்கொண்டிருக்கிறார் என்றான், எனவே நாம் அவரிடம் போய் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என்று தீர்மானித்து அவர்கள் அவரை அணுகினார்கள்.
சிறுவர்கள்: “எங்களுக்குள் ஒரு பிரச்சனை அய்யா!, அதனை நீங்கதான் தீர்த்து வைக்கணும்” என்றார்கள்.
முதியவர்: “பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பவர் ஒருவரே அவரையே நாம் எல்லோரும் சார்ந்து இருக்கிறோம். உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.” என்றார்.
சிறுவரில் ஒருவன்: எங்க அப்பா தமிழ் ஆசிரியர், தமிழில் உள்ள 247 எழுத்துக்களும் தெரியும். அவர்தானே எல்லாரிலும் பெரியவர்?” என்றான்.
இன்னொருவன்: “எங்க அப்பா ஆங்கில ஆசிரியர், 26 ஆங்கில எழுத்துக்களும் தெரியும். ஆங்கிலத்தில் பேசினால் மதிப்பு! அவர்தானே எல்லாரிலும் பெரியவர்?”
வேறொருவன்: “எங்க அப்பா கோயில் மணி அடிப்பவர், மணி அடித்தால் எல்லாரும் தங்களை படைத்த கடவுளிடம் வேண்டுதல் செய்வார்கள். அதனால் அவர்தானே எல்லாரிலும் பெரியவர்?”
முதியவர்: “உங்களுடைய பிரச்சனை புரிகிறது. சரி இதற்கு ஒரு சரியான முடிவு நான் சொல்லட்டுமா? நீங்க நன்கு கவனிப்பீங்களா?”
சிறுவர்கள்: “சரி கவனிக்கிறோம்.” என்றார்கள்.
முதியவர்: “உங்களுக்குள் ஏன் சண்டை?” இந்த உலகத்தைப் படைத்தவர்தான் அனைத்திற்கும் தகப்பன், அவர்தான் பெரியவர். அவர் உயிருள்ளவை, உயிரில்லாதவை, காண்பவை, காணாதவை, உன்னை, என்னை, ஆக எல்லாவற்றையும் படைத்தவர். இந்த தகப்பனின் சித்தத்திற்கு மாறாக செயல்படும்பொழுது பாவிகள் ஆகிறோம். அவருடைய கோபாக்கினைக்கு உட்பட்டவர்களாகிறோம். தேவன், நாம் செய்த பாவங்களை வெறுத்தாலும், அவர் நம்மை நேசிக்கிறார். நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்காக தமது ஒரேபேறான குமாரன் இயேசு கிறிஸ்துவை இவ்வுலகத்திற்கு அனுப்பினார். இயேசு கிறிஸ்து தன் தகப்பனின் சித்தத்தின்படி பாவமின்றி வாழ்ந்து, பல நற்கிரியைகளைச் செய்து மெய்யான தகப்பனை நமக்கு அறிமுகப்படுத்தினார், நம் பாவங்களை மன்னிக்க, தேவ சத்தியத்திற்காக கல்வாரி சிலுவையில் முழு விலையாக தன் ரத்தத்தை சிந்தி, ஜீவனை தந்து மரித்து, அடக்கம்பண்ணப்பட்ட அவர் பின்பு, மூன்றாம் நாள் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, நமக்கு மீட்பை உண்டுப்பண்ணினார். இதை விசுவாசித்து நாவினால் அறிக்கை செய்யும் யாவரும் அவர் மூலம் இரட்சிக்கப்படுவார்கள்.
தேவன், இயேசு கிறிஸ்துவை மரணத்தினின்று உயிரோடு எழுப்பியதால், நமக்கும் மரணத்தினின்று மீட்பும், நித்திய ஜீவனும் உண்டு என்பதை நிரூபித்தார். நாம் என்றென்றும் சர்வ வல்ல தேவனோடு நித்தியத்தில் வசிப்போம் இது சத்தியம்.
அனைத்தையும் படைத்த தேவன், இயேசு கிறிஸ்துவின் மூலம் நம்மேல் அன்பு வைத்ததைப் போல நாமும் ஒருவரிலொருவர் அன்பாய் இருந்திட வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. அன்பு திரளான பாவங்களை மூடும். இந்த உலகத்தில் நாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்று நாம் அறியோம். ஆகையால் ஒருவருக்கொருவர் அன்பாய் இருப்போம்.
பிதாவாகிய தேவனை குறித்தும், இயேசு கிறிஸ்துவை குறித்தும், பரிசுத்த வேதாகமத்தை குறித்தும், மேலும் அறிய விரும்பினால் கீழ்க்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.
யோவான் 11:25, 26.