இரட்சகர் பிறந்தார்

“…பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்கு… பிறந்திருக்கிறார்.” (லூக்கா 2:10-11).
ஒரு இரட்சகரின் வருகை
அந்த தேவதூதன் இருளை மூழ்கடித்து இரவின் அமைதியைக் குலைத்து திடீரென்று தோன்றின விதம் மேய்ப்பர்களைப் பயமுறுத்தினாலும், இரட்சகரின் வருகையை அறிவிக்கும் அவனது செய்தி அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது! வாக்குறுதி அளிக்கப்பட்ட மேசியாவுக்காக மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் காத்திருந்தனர். பாவம் முதன்முதலில் உலகத்தில் நுழைந்து, மரணத்தையும் கடவுளிடமிருந்து பிரிவையும் கொண்டுவந்த நாளில், பெண்ணின்(ஸ்திரீயின்) வித்தானவர் சோதனைக்காரனை தோற்கடித்து பாவத்தின் விளைவுகளை நீக்குவார் என்று கடவுள் அறிவித்தார் (ஆதியாகமம் 3:15). “இயேசு” என்று அழைக்கப்பட்டவரின் பிறப்பின் மூலம், எதிர்பார்க்கப்பட்ட அந்த பெரிய தருணம் வந்துவிட்டது, ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் (மத்தேயு 1:21).
இரட்சகர் தேவைப்பட்டார்
மக்களின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும், கடவுளுடனான அவர்களின் உறவு மீட்டெடுக்கப்படுவதற்கும், இரட்சகர் ஒரு கையை தெய்வீக சிங்காசனத்தின் மீதும் மற்றொரு கையை ஏழை மற்றும் விழுந்துபோன மனிதக்குலத்தின் மீதும் வைப்பது இன்றியமையாததாக இருந்தது. இந்த வழியில் மட்டுமே இரட்சகர் மனிதக்குலத்தின் தேவையை நிவர்த்தி செய்யும் போது கடவுளின் நீதியை முழுமையாகத் திருப்திப்படுத்த முடியும். அவர் முழுமையான கடவுள் மற்றும் முழுமையான மனிதனாக இருப்பதால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் இரட்சிப்பை உறுதிப்படுத்தத் தனிச்சிறப்பு வாய்ந்த தகுதியுடையவர்.
இயேசு – பாவம் செய்யாதவர். அவர் சிலுவையில் உயிரைக் கொடுத்தபோது – நம்முடைய பாவத்திற்கான முழுத் தண்டனையையும் செலுத்தினார். அவருடைய பரிபூரணமான தியாகம் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பிய ஒரு பரிசுத்த கடவுளால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர் யார் மற்றும் அவர் என்ன செய்தார் என்பதன் காரணமாக, “நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்: என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6). என்று இயேசு மட்டுமே சொல்ல முடியும். நாம் பாவத்திலிருந்து விடுவிக்கப்படவும், கடவுளிடமிருந்து நித்திய பிரிவினையைத் தவிர்க்கவும் விரும்பினால், நாம் இரட்சகரை அறிந்து கொள்ள வேண்டும்!
இயேசு காப்பாற்றும் வேலையைச் செய்திருந்தாலும், எல்லா மக்களும் இரட்சிக்கப்படவில்லை. நரகத்தின் அழிவில் நித்தியமாகத் தொலைந்து போகும் அபாயத்தைச் சிலர் கண்டுகொள்வதில்லை. பலர் தங்களைக் கடவுளுக்கு கீழ்ப்படிய மறுக்கிறார்கள் மற்றும் இரட்சகரை நிராகரிக்கிறார்கள். மற்றவர்கள் கடவுளுடைய தயவைப் பெறுவோம் என்று நினைத்து, “நல்ல” செயல்கள் அல்லது மதச் சடங்குகள் மூலம் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். ஆனால் வேதத்தின் படி, கர்த்தராகிய இயேசுவின் மீதான தனிப்பட்ட நம்பிக்கை மட்டுமே ஒரு பாவியை இரட்சகருடன் இரட்சிக்கும் உறவுக்குள் கொண்டுவர முடியும் (அப்போஸ்தலர் 16:30-31).
இயேசு உங்கள் இரட்சகரா?
பதில் ஆம் அல்லது இல்லை. “ஒருவேளை” அல்லது “நான் அப்படிதான் நினைக்கிறேன்” என்பதற்கு இடமில்லை. கிறிஸ்து உங்கள் பாவங்களுக்காக மரித்து உயிர்த்தெழுந்தார் என்று நீங்கள் உங்கள் இருதயத்தில் விசுவாசிக்கும்போது அவர் உங்கள் இரட்சகராக இருப்பார் (ரோமர் 4:24-25). இப்போதே அவரை நம்புங்கள், என்றென்றும் இரட்சிக்கப்படுங்கள். அப்பொழுது அவர் பெத்லகேமில் பிறந்த இரட்சகராகவும், இன்னும் பலருடைய இரட்சகராகவும் மாத்திரமல்ல, உனது இரட்சகராக இருப்பார்.

வேத வசனம்

“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”
(யோவான் 3:16).

“கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்………ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.”
(ரோமர் 10:9-10, 13).