ஒரு பயணி வழியோரம் பயணம் செய்துகொண்டிருந்தார். அவர் கையில் ஒரு கொட்டாங்குச்சியும் கூர்மையான கத்தியும் இருந்தது. அவர் தன்னுடைய ஒவ்வொரு அடிகளையும் மிகவும் கவனமாக வைத்துக்கொண்டும், தன் கண்களை இருபுறமும் திரும்பாமல் நேராகப் பார்த்துக்கொண்டு நடந்து போனார். அவரோடு கூட நடந்துகொண்டே நான் அவரிடம் இப்படியாக கேட்டேன்,
“உங்கள் பெயர் என்ன ?” “என் பெயர் நேரம்.” “எங்கே போகிறீர்கள்?” “எல்லையில்லா நித்தியத்திற்கு போகிறேன்.”
அவருடைய பின்னால் நான் நடந்தேன். எவ்வளவு நாட்கள் இவ்வாறு நடக்க வேண்டுமென்று எனக்கு தெரியவில்லை. அவரோடு கூட நடந்த பலரும் பயணத்தின் இடையில் ஒருபோதும் எழுந்திரிக்க முடியாத நிலையில் விழுந்து போனதை நான் கண்டேன். நேரம் அவர்களையெல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார். கற்பனையான இந்த நிகழ்ச்சியில் இருந்து இது சுட்டிக் காட்டுகிற உண்மை என்ன என்பதை காண்போம். ஆம், அன்பு வாசகரே!
வாழ்க்கையின் பாதையில் நேரம் என்கிற பயணியோடுதான் நாம் ஒவ்வொருவரும் பயணம் செய்துகொண்டிருக்கிறோம். அந்த பயணத்தின் இடையில் நாமும் ஒருநாள் விழுந்து போவோம். அதற்கிடையில் ஒருவேளை மழைக் காலத்திலும், குளிர் காலத்திலும் வாழ வேண்டியது இருக்கும். எப்படி இருந்தாலும் நேரத்தோடு கூட பயணிக்கிற நம்முடைய பயணம் மிகவும் சிறியது. இந்த பயணத்தின் முடிவு எங்கே? பயணத்தின் பின்பு நடக்கப்போவது என்ன? இந்த பயணத்தின் முடிவைக் குறித்து முன்னதாகவே சிந்திக்கவும், தேவையான முடிவுகளை தீர்மானிக்க நாம் கடமை பட்டிருக்கிறோம்.
ஒரு பிரபலமான பழமொழி இப்படியாக சொல்லுகிறது, “பாவி போகின்ற இடம் பாதாளம்”. பாவம் செய்கிறவர் களுடைய வாழ்க்கை நித்தியம் நரகவேதனையாயிருக்கும். பாவி என்றால் யார்?
பொய் சொல்வதே பாவம், அப்படியானால் எல்லோரும் பாவம் செய்திருக்கிறோம். மனிதரைப் படைத்த தெய்வம் மனிதரை நேசிக்கிறார். மனிதனுடைய இந்த பரிதாபகரமான நிலையைக் கண்ட தெய்வம் அவனை இரட்சிக்க கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக ஒரு இரட்சிப்பின் வழியை ஏற்படுத்தினார். அந்த இயேசுகிறிஸ்து நித்தியத்தை விட்டு ஒரு மனிதனாய் இந்தப் பூமியில் அவதரித்தார். பரிசுத்தராய் இந்த உலகத்தில் வாழ்ந்தார். மனிதனுடைய பாவங்கள் முழுவதையும் தன்மேல் ஏற்றுக்கொண்டு பாவத்தின் தண்டனையாகிய மரணத்தை அவர் நமக்காக அனுபவித்தார். மனுக்குலம் நித்திய பரலோகத்தை பெற்றுக் கொள்வதற்காக அவர் சிலுவையில் அறையப்பட்டார்.
மரித்தது மட்டுமல்லாது, மூன்றாம்நாள் மரணத்தை ஜெயித்து, ஜெய வீரனாய் உயிர்த்தெழுந்தார். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இவ்வாறு சொன்னார், “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னையல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்”. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கையை பின்பற்றும் வழி மட்டும் தான் நித்திய பரலோகத்திற்கு செல்கின்ற வழி.
இயேசு கிறிஸ்துவினுடைய மரணம் உங்களுடைய பாவத்தின் தண்டனைக்காக என்று அறிக்கை செய்து, உங்கள் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து, “கர்த்தராகிய இயேசுவே, நான் ஒரு பாவி. என்னுடைய பாவத்தின் தண்டனை நரகம் என்பதை அறிந்துகொண்டேன். எனக்காக நீர் மரித்து மூன்றாம்நாள் உயிரோடு எழுந்தீர் என்று விசுவாசிக்கிறேன். என்னுடைய பாவங்களை மன்னியும், தேவனே உம் குமாரனை என்னுடைய சொந்த இரட்ச்சகராகவும், கர்த்தராகவும் ஏற்றுக்கொள்கிறேன். என்னை உம்முடைய மகனாய்/மகளாய் ஏற்றுக்கொள்ளும். ஆமென்.” என்று இயேசுவின் நாமத்தில் அறிக்கை செய்தீர்களென்றால் உங்களை ஏற்றுக்கொள்ள அவர் தயாராயிருக்கிறார்.
அன்பு வாசகர்களே, தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய கரத்தின் அன்பு மனித வாழ்க்கையை மாற்றக் கூடியதாயிருக்கிறது. உங்கள் வாழ்க்கையில் சமாதானமும் தருகிறது. இயேசு கிறிஸ்துவினிடத்தில் வாருங்கள், வாழ்க்கையில் ஆசீர்வதிக்கப்படுங்கள். நித்தியவாழ்வு தரவும், புது ஒரு மாற்றம் தரவும், புதிய ஒரு வாழ்வு தரவும் இயேசுகிறிஸ்து உங்களை அன்புடன் அழைக்கிறார்.
“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”
யோவான் 3:16