இருளான உலகத்தில் மெய்யான ஒளி

“இதோ அங்கே வருகிறார்! அந்த தெருவைக் கடந்து விட்டார்…! வந்துகொண்டிருக்கிறார்…” என அருகிலிருப்பவர்கள் தங்களுக்குள்ளே ஆச்சரியமாய் பேசிக் கொண்டிருந்தார்கள். அது என் காதில் விழுந்தது. காதால் மட்டுமே உலகத்தை அறிந்து கொள்ளக்கூடிய நிலையில் இருந்ே்தன். பிறந்ததிலிருந்து சத்தத்தால் மட்டுமே என்னைச் சுற்றி நடப்பவைகளை அறிந்து கொள்ளும் நிலையில் இருந்தேன். இருண்ட உலகம் என்னுடையது. சூரிய வெளிச்சத்தைக் கண்டதில்லை, இரவின் மடியில் அமர்ந்து வானத்து நட்சத்திரங்களையும், பிறை சந்திரனையும் கண்டதில்லை, பச்சைப்பசேல் புல்வெளியின் அழகைக் கண்டு இரசித்ததில்லை. மழை, மலை, குன்று, ஆறு, ஓடை போன்ற எந்த அழகையும் நான் உணராத நிலையில் இருந்தேன். வெயில் சுட்டெரித்தாலும், மின்னல் வெட்டினாலும் இருள் என்னை விட்டு விலகவில்லை. முற்றிலும் புறக்கணிக்கப்பட்டேன், உதவி செய்பவர் யாருமில்லை, பிற மனிதர்களால்  அற்பமாய் எண்ணப்பட்டேன், என் அவலநிலையை குறித்துக் கவலைப்பட யாரும் இல்லை, பிறந்தது முதல் அந்தகார இருளில் வாழ்கிறேன்.

இயேசு வருகிறார்…! இயேசு வருகிறார்…! என்னும் விண்ணை எட்டும் ஆரவாரம் என் காதுகளை துளைத்தது. இயேசு வருகிறாரா?! என் உள்ளத்தில் பரபரப்பு. என்னுடைய இருதயம் வேகமாகத் துடித்தது. என்னுடைய இந்த நிலையை மாற்றும் வல்லமையுள்ள தேவக்குமாரன் வருகிறார். தேவனே மனிதனாய் வருகிறார். என் உள்ளம் படபடவென அடித்தது. எனக்கு இருப்பு கொள்ளவில்லை.. மேசியா வருகிறார். நான் இருக்கும் இடத்தைக் கடந்து செல்லப்போகிறார் என்ற வார்த்தை எனக்கு உத்வேகம் பிறப்பித்தது. கடந்து விட்டார்!! இப்பொழுது விட்டால் இந்த நிலையிலேயே இருந்து சாக வேண்டியதுதான். ஒரு தீர்மானம் எடுத்தேன்.

“தாவீதின் குமாரனே! எனக்கு இரங்கும்!” – கத்தினேன். கூட்டத்தில் இருந்தவர்கள் அமைதலாய் இருக்கும்படி என்னை அதட்டினார்கள். நான் கவலைப்படவில்லை. தருணத்தை தவற விடலாமா? இன்னும் அதிகமாய் கத்தினேன்! என் தொண்டை வெடித்துப் போகும்போல் கத்தினேன்! கூட்டத்தின் ஆரவாரத்தையும் மீறி என் குரல் எங்கும் ஒலித்தது. மீண்டும் கத்தினேன்.

“தாவீதின் குமாரனே! எனக்கு இரங்கும்!” இயேசு நின்றார். படைப்புகள் எல்லாவற்றிற்கும் படைப்பாளியாய் இருப்பவர் இந்த குருட்டுப் பிச்சைக் காரனுடைய வேண்டுதலைக் கேட்டு நின்றார். என்னை அழைத்து வரச் சொன்னார்ளூ சென்று பணிவோடு விண்ணப்பித்தேன், பார்வையடைந்தேன்!

ஆகா! பார்வை கிடைத்தது… மகிழ்ச்சி! உள்ளத்தில் எண்ணிலடங்கா மகிழ்ச்சி. வானத்தை கண்டேன், வண்ணங்களைக் கண்டேன், மனிதர்களைக் கண்டேன், இயேசுவைக் கண்டேன், ஆனந்தத்தால் குதித்தேன், ஆண்டவரைத் தொழுது கொண்டேன். இயேசுவின் பின் சென்றேன். என் நிலை முற்றிலுமாக மாறியது, ஏக்கமெல்லாம் தீர்ந்தது. நான் இயேசுவின் மேல் வைத்த விசுவாசம் என்னை இரட்சித்தது. இருண்ட உலகத்தில் இருக்கும் எந்த மனுஷனின் வாழ்க்கையையும் பிரகாசிக்கச் செய்யும் மெய்யான ஒளியாகிய இயேசு கிறிஸ்துவைக் கண்டு கொண்டேன்*.

உங்கள் வாழ்க்கையின் நிலை இருண்டதாக இருக்கலாம். இப்பொழுது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை கடந்து செல்கிறார். தருணத்தை நழுவவிடாதீர்கள். உங்களுடைய வாழ்க்கையை பிரகாசமடையச் செய்ய அவர் வல்லவராக இருக்கிறார்.

பாவ இருளால், மனக்கண்கள் குருடானவர்களாக தேவனைத் தேடுபவர்களுக்கு இயேசு கிறிஸ்து சமீபமாய் நிற்கிறார். கூப்பிட நீங்கள் விரும்புகிறீர்களா?

மனிதனுக்கும் பரிசுத்த தேவனுக்கும் இடையே பகையை உண்டாக்குவது பாவம். பாவத்தை நீக்கி மனிதனுக்கும் தேவனுக்கும் இடையே சமாதானம்  உண்டுபண்ணும் மத்தியஸ்தராக நிற்க தகுதி படைத்த ஒரே ஒருவர் தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து. அவரே நம் பாவத்தை போக்கும் பலியாக இவ்வுலகத்திற்கு வந்து தம்முடைய பரிசுத்தமான இரத்தத்தை சிந்தி, சிலுவையில் மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து இன்றும் ஜீவிக்கிறார்.

இந்த கைபிரதியை வாசிக்கும் நண்பனே! நீங்கள் உங்கள் நிலையை உணர்ந்து மனம்திரும்பி பாவத்தின் பரிகாரியாகிய  இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராகவும் கர்த்தராகவும் விசுவாசித்து, வாயினால் அறிக்கை செய்து ஏற்றுக் கொள்ளும்போது, தேவன் உங்களை பாவத்தின் அடிமைதத்னத்திலிருந்து விடுதலையாக்கி, நித்திய ஜீவனை அளித்து, சகலத்தையும் படைத்தவரின் பிள்ளையாக இன்றும் என்றும் வாழ வழிவகுப்பார்.

இந்த மெய்யான ஒளியாகிய இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டீர்கள் என்று நம்புகிறேன். நிச்சயமாக பார்வையடைந்த குருடனின் மகிழ்ச்சி உங்கள் உள்ளத்திலும் பொங்கும்.

இந்த மெய்தேவனை மேலும் அறிய விரும்பினால் கீழ்க்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.