முன்னொரு காலத்தில் யூதேயா நாட்டில் நாயீன் எனும் பேருள்ள ஒரு கிராமம் இருந்தது. நாயீன் என்றால் பேரின்பம் என்று பொருள். அந்த ஊரில் கைம்பெண் (விதவை) ஒருவள் தன் ஒரே மகனுடன் வாழ்ந்து வந்தாள்.
ஒரு நாள் அவளின் மகன் திடீரென்று இறந்துவிட்டான். பேரின்பம் என்னும் பெயருள்ள அவ்வூரைப் பெருந்துயரம் சூழ்ந்து கொண்டது. அந்த விதவைத் தாயுடன் ஊராரும் சேர்ந்து அழுது புரண்டு ஓய்ந்தபின் இறந்தவனின் உடலை அடக்கம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அதுவே அவனது இறுதி ஊர்வலம். இனி அவனது உடல் இந்த ஊரில் இருக்கப்போவதில்லை!
இடுகாட்டை (கல்லறையை) நோக்கிச்சென்ற அந்த ஊர்வலத்துக்கு எதிரே இன்னோர் ஊர்வலம் வந்துக்கொண்டிருந்தது. அந்த ஊர்வலத்தில் இயேசுவே மையமாக இருந்தார். பேரின்பபுரியில் ஒலித்த பெருந்துயரின் ஓலங்களை இயேசு கேட்டார். அழுது புலம்பும் அந்த மக்களை இயேசு பார்த்தார். அவர்களின் அருகில் வந்தார். மரணத்தின் வலியை, அது ஏற்படுத்தும் விளைவுகளைக் கண்டு மனதுருகினார். தன் ஒரே மகனைப் பறிகொடுத்த தாயிடம் போய், மனதுருக்கத்துடன் அவளைப் பார்த்து “அழாதே” என்றார். ஏற்கனவே, ஊர்மக்கள் அவளிடம் அழாதே, அழாதே என பலமுறை ஆறுதல்படுத்தியிருந்தனர். எனினும் அவள் தொடர்ந்து அழுதுக் கொண்டேயிருந்தாள். அந்த நிலையில்தான் இயேசு அவளைப் பார்த்து அழாதே என்றார். ஊரார் சொன்னது ஆறுதல்; இயேசு சொன்னதோ தீர்வு! இன்று ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை, ஆறுதல் அல்ல, தீர்வுதான்! அவளது அழுகையை நிறுத்த இயேசு ஒரு தீர்வு கண்டார். பல்வேறு மனவேதனைகளினாலும் குழப்பங்களினாலும் நீ அழுதுக் கொண்டிருக்கிறாயா? உன்னுடைய பிரச்சினைகளுக்கும் இயேசுவிடம் தீர்வு உண்டு.
அந்தத் தாயின் கண்ணீருக்குக் காரணம் அவளுடைய மகனின் மரணமே. மரித்துப்போன மகன் திரும்பக் கிடைத்துவிட்டால் அவள் அழமாட்டாள். எனவே, அவளின் மகனை உயிருடன் எழுப்புவதே இயேசு கண்ட தீர்வு. அழுது கொண!டிருக்கிற அவளைப்பார்த்து அவள்மேல் மனதுருகி அழாதே என்று சொல்லி, கிட்ட வந்து பாடையைத்தொட்டார். அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள். அப்பொழுது அவர்: “வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன்” என்றார். மரித்தவன் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார். அந்த ஊரின் சோகம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. நாயீன் என்ற ஊர் பேருக்கேற்றாற்போலவே பேரின்ப மயமாக மாறியது.
அன்பரே, இதைத்தான் இயேசு மனித குலத்துக்கும், (உனக்கும் எனக்கும் செய்தார்). மரணத்தின் பிடியில் சிக்கியிருந்த மனிதகுலம் அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. அதனால் மனித வாழ்வில் மிஞ்சியவை அழுகையும் கண்ணீரும் தான். இயேசு அதைக் கண!டார், அழுகுரலைக் கேட்டார், அழுவோரின் அருகே வந்தார். அன்று பாடையைத் தொட்டதுபோல இன்று உங்கள் பிரச்சினைகளின் வேரைத் தொடுகிறார்.
அன்று பாடையைத் தொடுவதற்காக நீட்டப்பட்ட அவரது கைகள் உங்களது பாவங்களைப்போக்கும்படியாகக் கல்வாரிச் சிலுவையில் நீட்டப்பட்டு ஆணிகளுக்குட்பட்டன. அன்று மரித்த சிறுவன் உயிருடன் எழுந்தான். அன்று புதைக்க வேண!டிய அவன் சரீரம் (உடல்) எழுப்பப்பட்டது. ஆனால், போற்றுதலுக்குரிய இயேசுவின் திருமேனியோ சிலுவையில் உனக்காகச் சிதைக்கப்பட்டது. இதுதான் இறைவனின் அன்பு. இந்த வார்த்தைகளை விசுவாசித்தால் நீயும் மரணத்தின் பிடியிலிருந்து விடுதலையடைவாய்.
கல்வாரிச் சிலுவையில் உனக்காக உயிர் கொடுத்த ஒரே ஒருவர் உத்தம தெய்வகுமாரனாகிய கர்த்தர் இயேசு கிறிஸ்து மட்டுமே. அவர் உயிரைக் கொடுத்தவர் மட்டுமல்ல, மூன்றாம் நாளில் மரணத்தை வென்று உயிரோடெழுந்தவர். அவர் மீண்டும் வரப்போகிறார். அதற்கான அடையாளங்கள் உலகில் நிறைவேறி வருகின்றன.
அவரது வருகைக்கு முன் அவரை ஏற்றுக்கொண்டு அவர் அருளும் மெய்யான விடுதலையைப் பெற்றுக்கொள். இயேசுகிறிஸ்து சிலுவையில் சிந்திய இரத்தத்தினாலே நமக்கு பாவமன்னிப்பு உண்டு. இவரை உலகரட்சகராக இருதயத்தில் விசுவாசித்து பாவத்தை அறிக்கை செய்தால் பாவமன்னிப்பைப் பெற்றுக்கொள்ளலாம். அவருடனான தேவ உறவில் உன் கண்ணீர் துடைக்கப்படும். உன் துயரமான வேளைகளில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன் அருகில் இருந்து உன் கண்ணீரைத் துடைப்பார். அவரிடம் மட்டுமே நீ தேடும் நிம்மதி கிடைக்கும். “அழாதே”.
இதைக்குறித்து மேலும் அறிய விரும்பினால் கீழ்க்கணும் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.
யோவான் 11:25, 26.