நாம் தேவனுடைய படைப்பின் விசேஷமானவர்கள். இந்த உலகத்தில் வேறு எவரும் உங்களைப் போன்றவர் இல்லை. உங்கள் உடலின் தோற்றம், உங்களுடைய குரல், ஆளுமைத்திறன், பழக்கவழக்கம், புத்திசாலித்தனம், ரசனைகள் ஆகியவை யாவும் உங்களை மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர்களாக ஆக்குகின்றன. உங்கள் கைரேகைகள்கூட உங்களைப் போன்று வேறு ஒருவருக்கும் இல்லை. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்தின் பட்டறையில் உருவாக்கப்பட்ட ஒரு தயாரிப்பு அல்ல, மாறாக இப்பிரபஞ்சத்தின் தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட தனித்துவமானவர்கள்.
தேவன் தம்முடைய சொந்த சாயலில் உங்களைப் படைத்தார் (ஆதியாகமம் 1:27). இதுவே உங்களுடைய அடையாளத்தைக் குறித்த முக்கியமான உண்மை. தேவனுடைய மாபெரும் படைப்பில் நீங்களும் பங்குகொள்ளவும், அவரைப் போலவே நீங்களும் அன்புகூரவும், இந்தப் பிரபஞ்சப் படைப்பில் மகிழ்ந்து களிகூரவும், முக்கியமாக நீங்கள் தனிப்பட்ட முறையில் அவரை அறிந்து கொள்ளவும் உங்களைப் படைத்தார். ஆம், நீங்கள் உண்மையிலேயே சிறப்பானவர்களே!
இந்த தேவன் தனிப்பட்ட முறையில் உங்கள் மீது அதிக அக்கறை கொண்டிருக்கிறார் என்பதை பரிசுத்த வேதாகமம் வெளிப்படுத்துகிறது. “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்ட படியால், உம்மைத் துதிப்பேன்” (சங்கீதம் 139:14) நீங்கள் பிறப்பதற்கு முன்னரே தேவன் உங்களை அறிந்திருக்கிறார். அப்பொழுது முதல் இப்பொழுது வரை அவர் உங்களுக்காக ஒரு தனிப்பட்ட திட்டத்தை வைத்திருக்கிறார். அந்தத் திட்டம் அன்பினால் அவருடைய உள்ளத்தில் உதித்த திட்டம்.
அவர் உங்களையும் என்னையும் அளவுகடந்து நேசித்தாலும், பல நேரங்களில் நாம் நமது சொந்த வழியில் சென்று, அவரை விட்டுத் தூரமாக விலகிச் செல்கிறோம். இவ்வாறு நாம் நடந்து கொள்ளும்போது, தேவன் நமக்காக வைத்திருக்கிற திட்டங்களை நாம் அடைய முடியாதபடிக்கு தடுக்கப் படுகிறோம்.
“தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம். அவைகளை நான் எண்ணப் போனால், மணலைப்பார்க்கிலும் அதிகமாம்; நான் விழிக்கும்போது இன்னும் உம்மண்டையில் இருக்கிறேன்” (சங்கீதம் 139:17, 18) நமது தேவன் உணர்வற்றவர் அல்ல, அல்லது நமது உணர்வுகளைப் புரிந்துகொள்ள இயலாத இதயமற்ற அரசனும் அல்ல. அவர் நமது உணர்வுகளைப் புரிந்து கொள்கிறார், நமது துக்கங்களில் நம்மோடு பங்கு கொள்கிறார். அவர் நம்மீது மிகுந்த அக்கறையுள்ளவராக இருக்கிறார். மேலும், நம்மை அவரது அன்புக்குப் பாத்திரமானவர்களாக எண்ணுகிறார்.
அவர் உண்மையாகவே நம்மை நேசிக்கிற படியால் நமது பாவங்களுக்காக மரிக்கும் படி தம்முடைய ஒரேபேறான குமாரனைத் தந்தார். இதிலே அவரது அன்பு வெளிப்படுகிறது. “நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது” (1 யோவான் 4:10) என்று வேதாகமம் கூறுகிறது.
நீங்களும் நானும் தேவனுடைய விசேஷமான சிருஷ்டிகள் என்பதால், அவர் நமது பாவங்களிலிருந்து நம்மை மன்னித்து, ஒரு முழுமையான, அர்த்தமுள்ள வாழ்க்கையை நமக்குத் தர விரும்புகிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம்பி, அவர் நமது வாழ்க்கையில் செயல்பட அனுமதிக்கும்போது, வேதாகமம் கூறுகிறபடி, நாம் “கிறிஸ்து இயேசுவின் வாயிலாக சிருஷ்டிக்கப்பட்ட தேவனுடைய தலைசிறந்த படைப்பாக” மாறுகிறோம் (எபேசியர் 2:10).
ஆம், நீங்கள் உண்மையிலேயே தேவனுக்கு மிகவும் அருமையானவர்கள். இதுவரையிலும் உங்களது இரட்சிப்புக்காக நீங்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கவில்லையெனில், இன்றே தீர்மானம் செய்யுங்கள். கீழ்க்காணும் ஜெபத்தை செய்வதன் மூலம் நீங்கள் அந்தத் தீர்மானத்தை அறிக்கை செய்யலாம்:
ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்தில் அனுப்பியதற்காக நன்றி, அவர் என் பாவங்களுக்காக மரித்து, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசிக்கிறேன். அவர் மூலமாக உமது மன்னிப்பையும், உம்மோடுகூட வாழுகிற நித்திய வாழ்க்கையையும் கொடுத்ததற்காக நன்றி கூறுகிறேன். உமது விசேஷமான படைப்பாக நான் மாறுவதற்கு இப்பொழுதே அவரை எனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன், ஆமென்.
இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.
யோவான் 11:25, 26.